ஆத்தோரம் பூத்தமரம்
ஆனை அடங்கும்மரம்
கெளையெல்லாம்
கூடுகட்டிக்
கிளியடையும் புங்கமரம்
புங்க மரத்தடியில்
பூவிழுந்த மணல்வெளியில்
பேன்பாத்த சிறுவயசு
பெண்ணே நெனவிருக்கா?
சிறுக்கிமக பாவாட
சீக்கிரமா அவுருதுன்னு
இறுக்கி முடிபோட்டு
எங்காத்தா கட்டிவிட
பட்டுச் சிறுகயிறு
பட்ட எடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில்நீ
எண்ணெய்வச்ச நெனவிருக்கா?
மருதாணி வச்சவெரல்
மடங்காம நானிருக்க
நாசமாப் போன
நடுமுதுகு தானரிக்க
சுருக்காநீ ஓடிவந்து
சொறிஞ்சகதை நெனவிருக்கா?
கருவாட்டுப் பானையில
சிறுவாட்டுக் காசெடுத்து
கோனார் கடை தேடிக்
குச்சிஐசு ஒண்ணுவாங்கி
நான்திங்க நீகுடுக்க
நீதிங்க நான்குடுக்க
கலங்கிய ஐஸ்குச்சி
கலர்க்கலராக் கண்ணீர்விட
பல்லால் கடிச்சுப்
பங்குபோட்ட வேளையில
வீதி மண்ணில்
ரெண்டுதுண்டா
விழுந்திருச்சே நெனவிருக்கா?
வெள்ளாறு சலசலக்க
வெயில்போல நெலவடிக்க
வெள்ளித் துருவல் போல்
வெள்ளைமணல் பளபளக்க
கண்ணாமூச்சி ஆடையில
கால்கொலுச நீ தொலைக்க
சூடுவப்பா கெழவின்னு
சொல்லிச்சொல்லி நீ அழுக
எங்காலுக் கொலுச
எடுத்துனக்கு மாட்டிவிட்டு
என்வீட்டில் -நொக்குப்பெத்தேன்
ஏன்டீ நெனவிருக்கா?
பல்லாங்குழி ஆடையில
பருவம் திறந்துவிட
என்னமோ ஏதோன்னு
சாகத்தான் போறேன்னு
சத்தமிட்டு நான்கத்த
வீடுசேத்த நெனவிருக்கா?
ஒண்ணா வளந்தோம்
ஒருதட்டில் சோறுதின்னோம்
பிரியாதிருக்க ஒரு
பெரியவழி யோசிச்சோம்
ஒருபுருசன் கட்டி
ஒருவீட்டில் குடியிருந்து
சக்களத்தியா வாழச்
சம்மதிச்சோம் நெனவிருக்கா?
ஆடு கனவுகண்டா
அருவா அறியாது
புழுவெல்லாம் கனவுகண்டணா
கொழுவுக்குப் புரியாது
எப்படியோ பிரிவானோம்
இடிவிழுந்த ஓடானோம்
இருவேறு தெசையானோம்
தண்ணியில்லாக் காட்டுக்குத்
தாலிகட்டி நீ போக
வறட்டூரு தாண்டி
வாக்கப்பட்டு நான்போக
ஒம்பொழப்பு ஒன்னோட
எம்புள்ள எம்புருசன்
எம்பொழப்பு என்னோட
நாளும் கடந்திருச்சு
நரைகூட விழுந்திருச்சு
வயித்தில் வளந்தகொடி
வயசுக்கு வந்திருச்சு
ஆத்தோரம் பூத்தமரம்
ஆனைகட்டும் புங்கமரம்
புயல்காத்தில் சாஞ்சிருச்சு
Itz Vairamuththu's one di
ReplyDeletesuits us well nah?